12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுவதோடு, இவர்களில் தலசீமியா நோய் உள்ளவர்களுக்கு மட்டும் பைசர் தடுப்பூசியின் 2 டோஸ்களை வழங்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தின் கொவிட் தடுப்பு குழுவின் உறுப்பினர் நோய்த் தடுப்பு வைத்திய நிபுணர் ரஜீவ் டி சில்வா இன்று (11) ஊடகங்களுக்கு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இலங்கையில் இதுவரை 12-18 வயதுக்கு உட்பட்ட 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் சிறுநீரக நோய் அல்லது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
எனவே இவ்வாறான நோய் நிலைமைகள் உடைய சிறுவர்களுக்கும் பைசர் தடுப்பூசியின் 2 டோஸ்களை வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக நோய்த் தடுப்பு வைத்திய நிபுணர் ரஜீவ் டி சில்வா தெரிவித்தார்.
அத்தோடு, நாட்டில் இதுவரை கொவிட் தடுப்பூசி போடாத 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு வைத்திய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.
அஸ்ட்ரா செனெகா, மொடர்னா, பைசர் ஆகிய தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதங்களுக்குள் கொவிட் தொற்று காரணமாக உயிரிழக்கும் வாய்ப்புகள் குறைவு என்பது தரவுகளில் இருந்து அறியமுடிகின்றது. அத்தோடு கொவிட் அறிகுறிகளும் இவர்களிடம் குறைவாகவே இருக்கும்.
எனவே 6 மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் ஒன்றை வழங்குவதற்கு இலங்கை மருத்துவ சங்கம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக வைத்திய நிபுணர் ரஜீவ் டி சில்வா மேலும் கூறினார்.