நாட்டின் நிதி பற்றாக்குறை மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அடுத்த ஆண்டில் மிகப்பெரிய அளவில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நிலையொன்று ஏற்படப் போகின்றது. எரிபொருள்,மின்சார தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டால் சமூகத்தில் பாரிய குழப்பகர நிலையொன்றும் உருவாகும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
புதிய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கூறிய காரணிகள் உண்மையானவையே.நாடு பாரிய நிதி நெருக்கடியில் உள்ளது,கடன்களில் நெருக்கப்பட்டுள்ளோம்,ஏற்றுமதி முற்று முழுதாக நிறுத்தப்பட்டுள்ளது, உற்பத்திகள் குறைவடைந்துள்ளன என்பதை அவர் வெளிப்படையாக கூறினார்.இதற்கு இந்த அரசாங்கமும் பொறுப்பாகும்.
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை தவறானது,அதனாலேயே நாடு வீழ்ச்சி கண்டு வருகின்றது.நிதி நெருக்கடியை சமாளிக்க பணம் அச்சடிக்கின்றனர்.நிதி நெருக்கடிக்கு உள்நாட்டில் பணம் அச்சடிப்பதால் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை.இதனால் டொலருக்கான பெறுமதியை தக்க வைக்கவும் முடியாது.அடுத்த ஆண்டில் குறிப்பாக 2022 ஆம் ஆண்டளவில் நிலைமைகள் மோசமடையும்.
இதனால் கருப்பு சந்தையின் கேள்வி அதிகரிக்கும்.இவ்வாறான நடவடிக்கைகள் பாரிய பிரச்சினைகளை உருவாக்கும். இந்த நிலைமையில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய இறக்குமதிகள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். எரிபொருள், எரிவாயு பிரச்சினை எழுகின்றது என்றால் அடுத்ததாக மின்சார தட்டுப்பாடும் ஏற்படும் என்கிறார்.