November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கம் சர்வதேசத்திற்கு செல்வதானால் நாமும் செல்வோம்’: பேராயர் மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு செல்வதானால், தாமும் சர்வதேசத்துக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் பாப்பரசரை சந்திக்கவுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்தே, பேராயர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை மூடி மறைத்து, சர்வதேசத்தையும் பாப்பரசரையும் ஏமாற்ற முயற்சிப்பதாகவும் பேராயர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகள் வெளிவரும் என்று பாதிக்கப்பட்ட மக்ள் இரண்டரை வருடங்களாக பொறுமை காப்பதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தாம் சர்வதேசத்திற்கு அறிவித்துள்ளதாக பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முதுகெலும்பு உள்ளவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒழிந்துகொண்டு சர்வதேசத்துக்குச் செல்ல மாட்டார்கள்.

இதனால், இந்த இடத்தில் சர்வதேசத்திற்கு செல்வது குறைந்த மதிப்புள்ள வேலையாகும். இங்குள்ள மக்களுக்கு இங்குள்ள சட்டத்தின் மூலம் தீர்வை வழங்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சூழ்ச்சிகள் உள்ளதாக கூறப்படுவதாகவும் அது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்றும் பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.