November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டின் வளங்களை அரசாங்கம் சூறையாடுகின்றது’

நாட்டின் வளங்களை,காணிகளை பாதுகாப்பதாக கூறி வந்த அரசாங்கம் கண்டி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் இரண்டில் ஆயிரத்து பத்து ஏக்கர் பகுதியை சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அரசின் பங்காளியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட பிரதிநிதி இந்த ஊழலுக்கு துணை செல்கின்றார்.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு இவர்கள் இதனை தடுப்பார்களா அல்லது அரசாங்கத்தை விட்டு வெளியேறுவார்களா எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி(விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள்,ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் வளங்களை, காணிகளை பாதுகாப்பதாக கூறி வந்த அரசாங்கம், அடிமட்ட மக்களுக்கு நலன்களை செய்வதாக கூறி வந்த அரசாங்கம் செலந்திவா நிறுவனத்தின் ஊடாக கண்டியில் உள்ள பெறுமதியான காணிகளை, கட்டடங்களை வெளிநாட்டவருக்கு விற்கும் விலை மனுக்கோரலை விடுத்துள்ளது. இந்நிலையில், அமைச்சரவையில் மேலுமொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள விவசாய நிலங்கள் இரண்டில் ஆயிரத்து பத்து ஏக்கர் பகுதியை சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நிக்கவரட்டிய விவசாய பூமியில் 760 ஏக்கரும்,வட்டக்கச்சி பகுதியில் 250 ஏக்கருமாக இவ்வாறு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,அரச தோட்டங்களில் பல ஏக்கர்கள் விலைமனு கோரலுக்கு விடப்பட்டுள்ளது.தனியார் நிறுவனங்களுக்கே இவற்றை கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.எமது தோட்டத் தொழிலாளர்கள் 150 ஆண்டுகளாக இந்த பகுதியில் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர்.நாட்டு பிரஜைகள் என்ற ரீதியில் இன்றும் அவர்கள் லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர்.அவர்களுக்கென வீடொன்றை உருவாக்கிக் கொள்ளவும் நிலம் இல்லை.

இந்நிலையில்,வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தும் அவர்களின் இடங்களை இவ்வாறு விற்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.மக்கள் தோட்ட அபிவிருத்திக்கு சொந்தமான இடங்களை விற்பதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் அரசின் பங்காளியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட பிரதிநிதி இந்த ஊழலுக்கு துணை செல்கின்றார்.அரசாங்கத்தில் இருந்து கொண்டு இவர்கள் இதனை தடுப்பார்களா அல்லது அரசாங்கத்தை விட்டு வெளியேறுவார்களா என இந்த சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்புகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.