July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பராலிம்பிக் வெற்றியாளர்களுக்கு வழங்கவுள்ள பணப்பரிசுக்கு அமைச்சரவை அனுமதி

டோக்கியோ பராலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களுக்கு பண வெகுமதி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, பராலிம்பிக்கில் பங்குகொண்ட இலங்கை வீரர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும் சுமார் 106 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ பராலிம்பிக்கில் இலங்கை சார்பில் பதக்கங்களை வென்ற வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் பணப்பரிசில்கள் வழங்கப்பட உள்ளன.

இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ளதுடன், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இம்முறை பராலிம்பிக்கில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றிருந்தது. ஈட்டி எறிதல் போட்டியில் தினேஷ் பிரியன்த தங்கப் பதக்கம் வென்றதுடன், மற்றுமொரு பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இதன்படி, தங்கப் பதக்கம் வென்ற வீரருக்கு 50 மில்லியன் ரூபா பணப்பரிசும், வெண்கலப் பதக்கம் வென்ற வீரருக்கு 20 மில்லியன் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட உள்ளது.

இது இவ்வாறிருக்க, இம்முறை பராலிம்பிக்கில் 4 முதல் 8 வரையிலான இடங்களைப் பெற்றுக் கொண்ட வீரர்களுக்கு தலா 2.5 மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளது. அதேபோல, 9 முதல் 16 ஆம் இடங்கள் வரையில் பெற்றுக் கொண்ட வீரர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட உள்ளது.

அதுமாத்திரமின்றி, உலக சாதனைக்காக பத்து மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளதுடன், பயிற்றுவிப்பாளர்களுக்கு 19.125 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

இதற்கு மேலதிகமாக தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்தவுக்கு 10 மில்லியன் ரூபாவும் வெண்கலம் வென்ற துலானுக்கு ஒரு மில்லியன் ரூபாவும் வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற தினேஷிற்கு சுமார் 70 மில்லியன் ரூபா பணப்பரிசு கிடைக்கவுள்ளது.

டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் இன்று (07)மாலை நாட்டை வந்தடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.