
ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால ஒழுங்குவிதிகள் 81 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரகால ஒழுங்கு விதிகளுக்கு ஆதரவாக 132 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதை தடுத்து, அவற்றின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அவசரகால ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்திருந்தவர்களில் ஆளும் கட்சியை சேர்ந்த 132 பேர் அதனை ஆதரித்தும், ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 51 பேர் அதனை எதிர்த்தும் வாக்களித்தனர்.
இதற்கமைய அவசரகால ஒழுங்குவிதிகள் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.