
ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை செயல்பாடுகள் தொடர்பான செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது முன்னுரிமை கொடுக்க வேண்டிய வகுப்புகள் தொடர்பில் தற்போது திட்டமிடல்களை தயாரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உயர்தரம், சாதாரண தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பிரிசில் பரீட்சைக்கு முகங்கொடுக்கின்ற மாணவர்களுக்கு பாடசாலையை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதன்படி, குறித்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஒக்டோபர் நடுப்பகுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் அந்த தீர்மானத்தை தற்போது உறுதியாக கூற முடியாது.
பாடசாலையை மிக விரைவில் ஆரம்பிக்குமாறு எங்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எனவே அதற்கான ஆயத்தங்களை நாங்கள் செய்து வருகிறோம்.
எனவே, மிக விரைவில் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறோம்.
டெல்டா வைரஸ் பரவுவதற்கு முன் நாங்கள் பாடசாலைகளை ஆரம்பித்திருந்தோம்.பரீட்சைகளையும் நடத்தியிருந்தோம்.அதன்படி, எதிர்வரும் காலங்களில் நாங்கள் சரியான திட்டமிடலுடன் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது குறைந்தளவு மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கொரோனா வைரஸின் நிலைமையை வைத்து தான் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.