November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோதுமை மா சர்ச்சை; விலை ஏற்றத்தை திரும்பப் பெற பிரிமா நிறுவனம் முடிவு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீனி, பால் மா, எரிவாயு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரிமா நிறுவனம் தாம் இறக்குமதி செய்யும் கோதுமை மாவின் விலையை நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி கிலோ ஒன்றுக்கு 12 ரூபாவால் அதிகரித்துள்ளமை புதிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

பிரிமா நிறுவனம் இந்த அறிவிப்பை நேற்று (03) வெளியிட்டிருந்தது.

இதன் காரணமாக நாட்டில் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் மற்றும் ஏனைய உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.

டொலரின் பெறுமதிக்கு நிகராக தமது இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதால், கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதிக்குமாறு பிரிமா நிறுவனம் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கடந்த ஜூலை மாதம் வேண்டுகோள் விடுத்ததாக குறிப்பிட்டது.

எனினும், கோதுமை மா விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியிருக்க வில்லை.

இந்நிலையிலேயே, கோதுமை மா விலையை அதிகரிப்பதற்கு பிரிமா நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை நுகர்வோர் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் ஆராய்வதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான ஆணையாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.

இதனிடையே, விலை அதிகரிப்புக்கு எழுந்துள்ள ஆட்சேபனைகள் காரணமாக கோதுமை மா விலை அதிகரிப்பை திருத்த முடிவு செய்துள்ளதாக பிரிமா சிலோன் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமது நிறுவனத்தின் 1 கிலோ கோதுமை மா, அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 87 ஆக சந்தையில் விற்கப்படும் என பிரிமா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

தாம் ஏற்கனவே பெரும் தொகை கோதுமை மாவை அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ள குறித்த நிறுவனம், அதற்கான நட்டத்தை அனுபவிக்க வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு தமது பேக்கரி பொருட்களின் விலை திங்கள் முதல் அதிகரிக்கப்படும் எனவும் பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.