July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி சர்ச்சை; பைசர் தடுப்பூசிகளை வீணடிக்காது சிறுவர்களுக்கு வழங்குமாறு மருத்துவர்கள் வேண்டுகோள்!

இலங்கையில் பைசர் தடுப்பூசிக்கான தேவையும் சர்ச்சையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் பைசர் தடுப்பூசிகள் முதல் முறையாக கொள்வனவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கொவெஸ் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க அமெரிக்கா முன்வந்தது.

இந்த தடுப்பூசிகள் முன்கள பணியாளர்கள், உயர்கல்விக்காகவும் பணிக்காகவும் வெளிநாடு செல்பவர்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் உலக நாடுகளில் பல அனுமதித்துள்ள தடுப்பூசி பட்டியலில் பைசர் தடுப்பூசியும் ஒன்று.இதன் காரணமாக வியாபார நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு பைசர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய தேவை அதிகரித்தது.

எனவே நாட்டில் பைசர் தடுப்பூசி வழங்கப்படும் தடுப்பூசி மையங்களை நோக்கி மக்கள் படை எடுத்தனர்.

இதனால் மோசடியான முறையில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட சம்பவங்கள் பதிவாகின. இதையடுத்து பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை  அரசாங்கம் இராணுவத்திடம் ஒப்படைத்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பைசர் தடுப்பூசிகளை மீளப் பெற்று அவற்றை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்தோடு, பைசர் தடுப்பூசியை 20-30 வயதினருக்கு வழங்கி வீணாக்காமல் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்குவதே தற்போது சிறந்த தீர்வாக இருக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

நேற்று வரை (03) கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட 180 சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை 25 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இரண்டு சிறுவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி பைசர் மட்டுமே என்று சங்கம் மேலும் கூறியுள்ளது.

எனினும் மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை மொத்தமாக 764,560 டோஸ் பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. முதலாவது டோஸாக 313,994 தடுப்பூசிகளும் 2 ஆவது டோஸாக 187,606 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் அறிக்கை தெரிவிக்கின்றது.