ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டோருக்கு பைசர் தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு அந்த சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
சுகாதார அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொவிட் கட்டுப்பாடு குறித்த ஜனாதிபதி செயலணியின் முடிவின்படி 50,000 டோஸ் பைசர் தடுப்பூசிகள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது
அத்துடன், குறித்த தடுப்பூசிகளை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு மாத்திரம் வழங்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், சட்டரீதியான தடைகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஜனாதிபதி செயலணியின் கூட்டங்களில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பங்கேற்கவில்லை என்பதை உங்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
ஆகவே, கொவிட் தடுப்பூசியின் அனைத்து நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு எதிரான இந்த முடிவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க தொழில்நுட்பக் குழுக்களில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய ஆறு விடயங்களையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது இவ்வாறிருக்க, பைசர் தடுப்பூசியை 12 முதல் 18 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலை செல்கின்ற மாணவர்களுக்கு வழங்குமாறும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பைசர் தடுப்பூசிகளை மீளப் பெற்று அவற்றை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் உள்ள 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டோருக்கு பைசர் தடுப்பூசியை போடுவதற்கு எடுத்த முடிவை இடைநிறுத்துமாறும் அந்தக் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.