விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இருக்கும் சிறைக்குள் இருந்து கைத்தொலைபேசி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறை காவலர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கைத்தொலைபேசி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில், மெகசின் சிறையில் பணியாற்றும் குறித்த சிறை காவலர் வவுனியா சிறைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீன் கைத்தொலைபேசியில் உரையாடுவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று, ரிஷாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்தைப் பரிசோதித்த போது அங்கிருந்து கையடக்க தொலைபேசியொன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் பரிசோதிக்க வந்தபோது, கையடக்க தொலைபேசியை சிறைக் கூடத்துக்கு வெளியே வீசியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்ட குறித்த கையடக்கத்தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு சிறைக் காவலர் ஒருவர் அந்த கைத்தொலைபேசியை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சிறைக் காவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.