இலங்கைக்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள கடன் உதவிகள் மூலம் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வலுவடையும் என நிதி மற்றும் மூலதன சந்தைகள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தால் கிடைக்கவுள்ள 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சீன அபிவிருத்தி வங்கியால் கிடைக்கவுள்ள 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க டொலரின் கையிருப்பு வலுப்படுத்தப்படுவதாகவும், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி வலுவடையும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்கள் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளை எவ்வித இடையூறும் இல்லாமல் மேற்கொள்ள முடியும் என்றார்.
தற்போது, இலங்கை பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இறக்குமதி நடவடிக்கைகளுக்கு கடுமையான சிரமங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, சிறிய இறக்குமதிகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதேபோல, நாட்டின் மிகப்பெரிய இறக்குமதியான பெட்ரோலிய இறக்குமதிக்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளை மத்திய கிழக்கு நாடுகளுடன் அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
எனினும், எதிர்காலத்தில் இலங்கை பொருளாதாரத்தில் ஒன்றுசேர்க்கப்படும் அமெரிக்க டொலர்களின் அளவு அமெரிக்க டொலர் இருப்புக்கு போதுமான பலத்தை கொடுக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.