இலங்கையின் தென் கடல் பகுதியில் படகொன்றில் இருந்து 290 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
ஆழ்கடல் பகுதியில் 30 ஆம் திகதி பிற்பகல் சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகொன்றை சுற்றி வளைத்து சோதனை நடத்திய போது, அதில் இந்து பெருமளவு போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 2321 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாகும் என்று கடற்படையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் அந்தப் படகில் இருந்த 5 பேரை கைது செய்துள்ள கடற்படையினர், போதைப் பொருட்களுடன் அவர்களை பேருவளை துறைமுகத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கைகளுக்கென ஜுலை 30 ஆம் திகதி இவர்கள் குறித்த மீன்பிடி படகின் மூலம் கடலுக்கு சென்றவர்கள் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதன்போது ஆழ்கடல் பகுதியில் சர்வதேச போதைப் பொருள் வியாபாரிகளிடமிருந்து இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த ஹெரோயின் போதைப் பொருளை குறித்த படகில் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.