தாம் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள கிராம சேவகர் பிரிவு அல்லது பொதுச் சுகாதார அலுவலகர் காரியாலயங்களில் மாத்திரம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அளவுகள் கொடுக்கப்படுவதால், தடுப்பூசியை தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து மட்டுமே பெறுமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்று சிக்கல்களை ஏற்படுத்தியிருந்ததாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, கொழும்பு – விஹாரமகா தேவி பூங்கா மற்றும் தியத உயனவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தடுப்பூசியைப் பெற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்று (29) ஒரு இலட்சத்து 18,241 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில், 10, 254 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது.
நேற்று இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 7,987 ஆகும். இதில், 93,715 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.
தற்போது, இலங்கையில் ஒரு கோடியே 23 இலட்சத்து 25,787 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் 73,120 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் மொத்தமாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 இலட்சத்து 731,120 ஆகும்.