November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பைசர் தடுப்பூசி வழங்கும் அதிகாரம் இராணுவத்தினர் வசம்!

இலங்கையில் முதல் தடவையாக பொதுமக்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான முழு அதிகாரமும் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளி பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு இரகசியமான முறையில் பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான பல சர்ச்சைகளுக்கு பின்னர் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவால் 100,000 டோஸ் பைசர் தடுப்பூசி இலங்கைக்கு வழங்கப்பட்டது.

இந்த தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்பவர்களுக்கும் வயோதிபர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம், சிலாபத்தில் உள்ள கொக்கவில தடுப்பூசி மையத்தில் சுகாதார அதிகாரிகளின் தலையீட்டுடன் பைசர் தடுப்பூசி வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இவ்வாறு தடுப்பூசி பெற்ற நபர்களின் விவரங்கள் வேண்டுமென்றே ஆவணங்களில் சேர்க்கப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இனிமேல் பைசர் தடுப்பூசி இராணுவத்தின் தலையீட்டுடன் மக்களுக்கு வழங்கப்படும் என்றும், முறையான நடைமுறைக்கு வெளியே தடுப்பூசி பெற தகுதியற்ற எந்த ஒரு நபருக்கும் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என்றும் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதுவரை நாட்டில் 306,373 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 182,555 பேருக்கு 2ஆவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.