
File Photo
சுகாதார அமைச்சின் அனுமதியின்றி 12 வயது சிறுமியொருவருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் புத்தளம் கொக்காவில பகுதியிலுள்ள தடுப்பூசி நிலையமொன்றுக்கு பொறுப்பாக இருந்த வைத்தியர் ஒருவரும், அங்கு கடமையாற்றிய குடும்ப சுகாதார உத்தியோகத்தர் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்கள் இருவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் பல இடங்களில் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், அங்கு வெளியிடங்களை சேர்ந்தோரும் சென்று தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புத்தளம் கொக்காவில பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட தடுப்பூசி நிலையத்தில் 12 வயது சிறுமியொருவர் தடுப்பூசி ஏற்றுவதற்கான அழைத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வைத்தியர் ஒருவரின் ஆலோசனைக்கமையவே இவ்வாறு சிறுமிக்கு தடுப்பூசி ஏற்றவுள்ளதாக அந்தச் சிறுமியையும் அந்த நிலையத்திற்குள் அழைத்துச் சென்ற அங்கு பணியில் இருந்த குடும்ப சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் கூறியிருந்தார்.
நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் இதுவரையில் அனுமதி வழங்காதிருக்கும் நிலையில் இந்தச் சிறுமிக்கு எவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட்டது என்ற விசாரணைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.