
இலங்கையில் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வரையில் புதிய கொரோனா கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த புதிய ஒழுங்கு விதிகளை வெளியிட்டுள்ளார்.
தொழில் அல்லது மருத்துவ தேவைகளுக்காக வீட்டில் இருந்து ஒருவருக்கே வெளியேற முடியும் என்று புதிய கொரோனா கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்குள் பஸ் அல்லது ரயிலில் ஆசனங்களின் அளவுக்கு ஏற்பவே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரச நிறுவனங்கள் நிறுவன தலைவர் தீர்மானிக்கும் குறைந்த அளவு ஊழியர்களுடனும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து சேவைக்கு வருவோர், நிறுவன தலைவரின் அனுமதிக்கு ஏற்ப கடமையாற்ற வேண்டும்.
ஒன்றுகூடல்கள், மாநாடுகள், பாடசாலைகள், மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
விற்பனை நிலையங்கள், கடைத் தொகுதிகள், நிதி நிறுவனங்கள் போன்றன அவற்றின் மக்கள் கொள்ளளவில் 25 வீதத்தை மாத்திரம் அனுமதிக்க முடியும்.
திருமண நிகழ்வுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.
விகாரை, கோயில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களில் கூட்டாண வணக்கங்கள் தடை செய்யப்பட்டு, தனியான வணக்க வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், விடுதிகள் 50 வீதமான மக்கள் தொகையை சுகாதார வழிகாட்டல்களைப் பேணி, அனுமதிக்க வழிகாட்டப்பட்டுள்ளது.