வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் வரவேற்பு வளைவில் சம்பிரதாய பூர்வமாக கொடி கட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
நல்லூர் ஆலய அறங்காவலர் சபையினரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கொடி கட்டும் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் உள்ளிட்டரோர் கலந்து கொண்டனர்.
நல்லூர் ஆலயத்தை அடையாளப்படுத்தும் வகையில் செம்மணி பிரதான வீதியில் இந்த வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியினால் 8 மில்லியன் ரூபா நிதித் திட்டத்தில் நல்லூர் ஆலயத்தை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி வளைவு, இந்த வருடம் தைப் பொங்கல் தினத்தன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.