November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கத்திடமிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள்’

இலங்கையில் மக்கள் தற்போது தங்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றுவதை விட, அரசாங்கத்திடமிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அந்தளவிற்கு மனிதாபிமானமற்றதாக மாறிவிட்டதாகவும் மக்களின் எதிர்ப்பாளராக அரசாங்கம் மாறிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

அரசாங்கம் நாட்டு மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டை ஒதுக்கி வைத்து விட்டு, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக மக்கள் சார்பு கொள்கைக்கு மாற வேண்டும்.

கொரோனாவையும், பொருட்களின் விலையையும் கட்டுப்படுத்தும் திறனை அரசாங்கம் இழந்துவிட்டது.அரிசி மாஃபியாவை எதிர்கொள்வதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும்,அது முழுமையாக தோல்வியடைந்துள்ளதுடன்,இன்று அரிசி விலைகள் அபாயகரமான அளவில் உயர்ந்து வருகிறது.

நெருங்கிய நண்பர்களுக்கு அதிக வரிச்சலுகை வழங்கி இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.சீனி மோசடியால் ஏற்படும் இழப்பு சிறிதல்ல.சந்தையில் ஊட்டச்சத்துகளுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதுடன், இதன் காரணமாக குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி, கோதுமை மா, சீனி, பால், கோப்பி மற்றும் இறைச்சி வகைகளின் மொத்த விலைகள் 16 முதல் 32 வீதம் வரை உயர்வடைந்துள்ளன.பால்மா, வெண்ணெய், சோயா, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் மற்றும் தானியங்கள் பழங்களுடன் உற்பத்தி செய்யப்படும் உப உற்பத்தி பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளது.

தீவிர வர்த்தக மாஃபியா செயல்படுகின்ற நிலையில்,அதற்கும் அரசாங்கம் துணை நிற்கிறது.பொருட்களின் விலைக் கட்டுப்பாடு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்வையே நடத்திச் செல்ல முடியாதுள்ள மக்களுக்கு, பொருட்களின் விலை அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாதுள்ள நிலைமை காணப்படுகின்ற நிலையில், அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொள்ளாது தேவையற்ற பாரிய திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளார்.