சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்தில் பலப்படுத்த வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு ஏற்ப, அவர்களில் அதிக சதவீதமானவர்கள் தோட்டப் பகுதி பிள்ளைகள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்குத் தேவையான அதிகாரம், கிராம அதிகாரி மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிபிட்டுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களின் விபரங்கள், கிராம அதிகாரிகளிடம் உள்ளன.
வீடொன்றில் பிள்ளை ஒருவர் இல்லாமல் போவது பற்றி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அது பற்றி உடனடியாகச் செயற்பட்ட வேண்டும்.
இதன் மூலம் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஜனாதிபதி இதன் போது அறிவுறுத்தியுள்ளார்.
முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்விகள், அனைத்துப் பிள்ளைகளுக்கும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், சிறுவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பாதிருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக்கு “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதனை யதார்த்தமாக்குவதற்கு தனியான இராஜாங்க அமைச்சு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் மற்றும் மகளிர் மீதான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு இராஜாங்க அமைச்சு முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களையும் இதன்போது ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
வேறு நாடுகளில் சிறுவர் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சிகளைப் படித்து, நகர மற்றும் கிராமிய மட்டத்தில் அந்த முறைமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.
சிறுவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பாதிருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இந்த கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.