இலங்கையில் நடைபெறவிருந்த 2021 திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக போட்டியின் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய இந்தப் போட்டி 2022 ஜனவரி 9 -16 வரை லாஸ் வேகாஸில் நடைபெறும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
2021 திருமதி உலக அழகிப் போட்டிக்காக போட்டியாளர்கள் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.MrsWorld.com வழியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டி இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றப்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற திருமதி ஸ்ரீலங்கா போட்டியில், 2021 திருமதி உலக அழகிப் பட்டம் வென்ற கரோலின் ஜூரி, குறித்த போட்டியில் மகுடம் சூட்டப்பட்ட வெற்றியாளரான புஷ்பிகா சில்வாவின் மகுடத்தை நீக்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
விவாகரத்து பெற்றவர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று கூறி வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா சில்வாவின் மகுடத்தை சில நிமிடங்களுக்குப் பிறகு ஜூரி நீக்கியிருந்தார்.
இந்த நிகழ்வின் பின் குறித்த போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜூரி மற்றும் மொடல் சூலா பத்மேந்திரா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் அதன் பிறகு கரோலின் ஜூரி தனது திருமதி உலக பட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருந்தார்.