July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கவிஞர் அஹ்னாஃப் ஜசீமுக்கு சட்ட உத­வி­களை பெற்­றுக்­ கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி!

(Face book :Ahnaf Jazeem)

ஓர் ஆண்டுக்கு மேலாக கைது செய்­யப்­பட்­டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் கவிஞர் அஹ்னாஃப் ஜசீமுக்கு சட்ட உத­வி­களை பெற்றுக் கொள்ள இடமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

26 வயது கவிஞர் அஹ்னாஃப் ஜசீமின் கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (04) மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து கவிஞர் அஹ்னாஃப்  ஜசீம் மஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படவில்லை என மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே. காங்-ஈஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் லட்சுமணன் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்திற்கு தகவல் அளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே, சந்தேக நபர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.மற்றும் தடுப்புக்காவல் காலாவதியானதை அடுத்து அவர் மஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த அடிப்படை உரிமை மனுவுக்கு எதிராக சட்டமா அதிபர் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

26 வயதான கவிஞர் அஹ்னாஃப்  ஜசீம் வெளியிட்ட “நவ­ர­சம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கம் தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 2020 மே 16 அன்று கைது செய்யப்பட்டார்.

இவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒரு வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இவரின் விடுதலைக்காக பல சமூக அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.