May 28, 2025 10:39:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்?: கல்வி அமைச்சர் பதில்

ஆசிரியர்களுக்கு இரண்டாவது டோஸ் கொவிட் தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை மீளத் திறக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் ஆரம்பத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 80 வீதமான ஆசிரியர்களுக்கு முலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த நடவடிக்கைகளை பூர்த்தி செய்து, இந்த மாத இறுதியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஆசிரியர்களின் போராட்டங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றதாகவும், இதன்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும், அதன்போது மற்றைய அரச துறை ஊழியர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் இதன்போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.