November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தடுப்பூசி ஏற்றிக்கொண்டார்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (03) கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு கொவிட் சிகிச்சை அளித்த மருத்துவர்களின் கடுமையான ஆலோசனையின் பேரில் இன்று தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடத் தவறினால், நான் மீண்டும் கொவிட் நோய் தொற்றுக்குள்ளாகலாம், அது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்தனர். எனது தற்போதைய உடல் நிலையின் படி, நான் அவர்களின் உத்தரவை ஏற்றுக் கொண்டேன்” என அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரின் பாரியாரும் சமீபத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

இதனிடையே “நாட்டு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றி முடிக்கும் வரையில் நான் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள மாட்டேன்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.