
சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களினால் நுவரெலியால் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பேரணியில் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை,கொத்மலை, ஹங்குராங்கெத்த, நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய கல்வி வலையங்களை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு முன்னால் இருந்து நுவரெலியா நகர் வரையில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டுக்கு பின்னராக நாட்டில் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு நிலவி வரும் சம்பள உயர்வு முரண்பாடு மற்றும் சம்பள நிலுவை தொடர்பான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டும், கொத்தலாவலை சட்டமூலம் தொடர்பான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டும் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி கடந்த மூன்று வாரங்களாக அதிபர், ஆசிரியர் சங்கங்கள் நாடு முழுவதும் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அதனுடன் இணைந்ததாகவே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.