2020 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 622,000 மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.
அழகியல் பாடங்களுக்கான செயல்முறை பரீட்சைகள் உரிய நேரத்தில் நடத்த முடியாதுள்ளமை இதற்கான ஒரு முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான செயல்முறை பரீட்சைகள் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2020 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இந்த ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்றது.
நாடு இயல்பு நிலையிலிருந்தால் ஜூன் மாதத்தில் முடிவுகளை வெளியிட்டிருக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் கூறினார்.
இலங்கையில் கொரோனா 3 வது அலை காரணமாக ஏப்ரல் நடுப்பகுதியில் தொடங்கி, அரசு அலுவலகங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யப் பணிக்கப்பட்டனர். மற்றும் ஒரு மாத கால பயண கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.
இந்த நடவடிக்கைகளும் சாதாரணதர பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சாதாரணதர பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற போதிலும் தொற்று நோயுடன் நாட்டின் சூழ்நிலைகள் மாறும் போது சரியான திகதியை வெளியிட முடியாதுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.