
தற்போது நாட்டில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில் 15 வீதமானோர் “டெல்டா” வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் எனவும், விரைவாக வைரஸ் தொற்று பரவுகின்றதை தரவுகள் வெளிப்படுத்துகின்றதாகவும் வைத்திய நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
வெறுமனே தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதால் அச்சுறுத்தலில் இருந்து விடுபட முடியாது எனவும், முறையான சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கிய பின்னரே நாட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் தற்போதும் டெல்டா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னாள் ஆலோசகரும், தொற்று நோயியல் நிபுணருமான விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சுகாதார பிரிவினரிடையே கொவிட் தொற்று அதிகரித்து வருவதாக கொழும்பு டெய்லி மிரர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அத்தோடு, தடுப்பூசி 2 டோஸ்களை ஏற்றிக் கொண்டுள்ள வைத்தியர்கள், முன்கள பணியாளர் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு இடையே கொவிட் -19 கொத்தணி உருவாகி வருவதாகவும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது சுகாதாரத் துறையில் ஆள் பற்றாக்குறைக்கு வழி வகுக்கும் எனவும் மூத்த சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தடுப்பூசி மட்டுமே கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தீர்வு இல்லை. பாரதூரமான நிலைமையிலேயே இப்போதும் கொவிட் தரவுகள் உள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே வலியுறுத்தியுள்ளார்.
இத்தோடு ஒட்சிசன், கட்டில்களின் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.நாம் இப்போது பலவீனமான தீர்மானங்களை எடுத்தால் பின்னர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இது எவருக்கும் விளங்குவதில்லை. நாடு அச்சுறுத்தலான நிலையில் உள்ளது. முதலில் நிலைமைகளை கட்டுப்படுத்த நிலையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து பின்னர் நாட்டை திறக்க வேண்டும் எனவும் வைத்தியர் பிரசாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.