பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த சிறுமி இஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதுடன், கொழும்பில் மரணமடைந்த இஷாலினியின் மரணத்திற்கு காரணமானவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சிறுமிகள், பெண்கள் மீதான, துஷ்பிரயோக சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகவுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இஷாலினியின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
எமது நாட்டின் பெண்கள் சுய கௌரவத்துடன் பாதுகாப்பாக வாழும் சூழ்நிலையை அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான துஷ்பிரயோக சம்பவங்கள் தடுக்கப்பட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.