January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘போர்ட் சிட்டி’ குறித்து கவலை வெளியிடும் அமெரிக்கத் தூதுவர்

கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பான சட்டம் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் கவலை கொண்டுள்ளது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துறைமுக நகரில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவுள்ளமை தொடர்பிலும் கவலையடைவதாகவும், ஆனால் அதில் முதலீடு செய்யவேண்டாம் என கோரும் நடவடிக்கைளில் அமெரிக்கா ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுடனான கலந்துரையாடலொன்றிலேயே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தை உள்ளடக்கிய சட்டம் மற்றும் அதிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனம் ஒன்று மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என்றும், குறித்த நிறுவனத்துடன் வணிகம் செய்வது நல்லதல்ல எனவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுநகர சட்டத்தில் ஊழல் செல்வாக்குகள்,சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்றவற்றில் ஈடுபடத்தூண்டுதல் போன்ற பலவீனமான அம்சங்களை கொண்ட குறைபாடுகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.