முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் இருந்து தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் கொரோனாவிலிருந்து நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
என்னை சிறைப்படுத்தி நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இதுதான் நான் சிறையில் இருந்த அதிக நாட்களாகும். முன்னதாக கொரோனா காலத்தில் நான் ஏழை மக்களுக்கு அரிசி, மரக்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கியிருந்தேன். ஆனால் அப்போதும் என்னை 44 நாட்கள் சிறையில் அடைத்தார்கள்.
ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நான்கு ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளேன். இதில் 11 ஆண்டுகள் எனது பிரஜாவுரிமையும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் உங்களில் ஒருவனாக இருந்த நான் தற்போது மிகவும் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகி, நோய்வாய்ப்பட்டு இந்த சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறேன். ஆனால் மன தைரியத்தோடு இந்த தண்டனையை எப்படியாவது முகங்கொடுக்க வேண்டும்.
நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தக் கடிததத்தின் இறுதியில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் மக்களுக்காக குரல் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ சிகிச்சைக்காக தங்காலை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் மருத்துவமனை அறையில் தங்கியிருந்து சிகிச்சைகளை எடுத்துக் கொண்ட அவர், மீண்டும் அங்குனகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.