
இலங்கையில் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
விரைவில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் ஆசிரியர், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, தடுப்பூசியின் 2 வது டோஸ் ஆகஸ்ட் இறுதிக்குள் வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (26) காலை வரை 77% பூர்த்தியாகியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுடன் நாளை (27) கலந்துரையாடப்படும் என்று அமைச்சர் இதன்போது கூறினார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் இயன்ற அனைத்தையும் செய்யும் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
சம்பள முரண்பாடு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இன்று 15வது நாளாகவும் இணையவழி கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.