May 23, 2025 16:53:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எக்ஸ்-பிரஸ் கப்பலிலிருந்து தொடர்ந்தும் எண்ணெய் கசிவு; உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’

கொழும்பு கடற்கரையில் தீ பற்றி எரிந்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு தொடர்ந்தும் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குநர் ஹேமந்த விதானகே வியாழக்கிழமை (22) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,எக்ஸ்-பிரஸ் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து கொண்டிருப்பதாக கூறினார்.

எக்ஸ்-பிரஸ் கப்பல் பேரழிவைத் தொடர்ந்து 275 க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடல் ஆமை இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை 2000 க்கு மேல் இருக்கலாம்.அதேபோல், சுமார் 45 டொல்பின்களும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எண்ணெய் கசிவு காரணமாக அதிகமான மீன்கள் இறந்ததனால் பல மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

‘தற்பொழுது கிடைத்த தகவல்களின்படி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 02 முதல் 03 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு துவாரத்திலிருந்து எண்ணெய் வெளியேறுகிறது.இந்த கசிவை நிறுத்த முடியும்.

எனவே இந்த கசிவை நிறுத்துவதற்கு நாங்கள் நீண்ட காலம் காத்திருக்க முடியாது.கசிவை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்று அவர் வலியுறுத்தினார்.