2022 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி ஜூலை மாதம் 31 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், தற்போது நிலவும் தொற்றுநோய் நிலைமை, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022 ஜனவரி 31 ஆம் திகதியில் 5 வயதை பூர்தி செய்யும் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதன்படி அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது வீடுகளுக்கு அருகில் உள்ள மூன்று மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட 6 பாடசாலைகளுக்காவது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்றும் தகுதியுடைய பாடசாலைக்கு பிள்ளை அனுமதிக்கப்படுமென்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.