தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாத நிலையில் உள்ளவர்களுக்காக நடமாடும் தடுப்பூசி சேவையை தொடங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நோய்வாய்ப்பட்ட மற்றும் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு நடமாடும் சேவையின் மூலம் தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
தடுப்பூசி திட்டத்தை பொது சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் அல்லது சிறப்பு தொலைபேசி எண்கள் மூலம் தகவல்களைப் பெறுவதன் மூலம் விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் பதிவான கொரோனா மரணங்களில் பெரும் எண்ணி்கையிலானவர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் என்பதை கொவிட் தடுப்பு குழு வெளிப்படுத்தியது.
எனவே, தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அவர்களை வழிநடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, கம்பாஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடுத்த நான்கு நாட்களுக்குள் தடுப்பூசி ஏற்றப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரனதுங்க சுட்டிக்காட்டினார்.
முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சுற்றுலா பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் 90 வீதம் வரை முடிந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறைகளில் முன்னேற்றம் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதன்போது எந்தவொரு துறையிலும் பணிபுரியும் ஒருவருக்கு இருக்கும் இடத்திலிருந்து எளிதில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அத்தோடு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான வழிவகைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன் போது எடுத்துரைத்தார்.