July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தில் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புக்கு இலங்கை பாராட்டு

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தின் போது அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு இலங்கை நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பல்வேறு துறைகளிலும் பலப்படுத்துவதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்கால கடல் சார்ந்த அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் விதமாக இலங்கையின் கடல் பாதுகாப்பு அதிகாரிகளின் திறன் மேம்படுத்துவதில் ஒத்துழைக்க முன்வந்த அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்னுக்கும் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட கழிவுகளை சுத்திகரிக்கும் முயற்சிகளுக்கும் அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இந்த சந்திப்பில் நாடுகளின் பரஸ்பர நலன்களுக்கு ஏற்ப இருதரப்புக் கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கு முக்கிய தளங்களான அரசியல், பொருளாதார மற்றும் கடல்சார் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இலங்கை- அவுஸ்திரேலியா நிபுணத்துவப் பரிமாற்றத்திற்கு சாத்தியமான துறைகளான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கும் இந்த சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கையில் சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவின் கல்வித் தகுதிகளைப் பெறக்கூடிய கல்வி மையமாக ஊக்குவிப்பதற்கு அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஆர்வம் தெரிவித்துள்ளார்.