கடலட்டை பண்ணை விடயத்தில் வெளிப்படையான பகல் கொள்ளை நடந்துள்ளது. அமைச்சரோடு சேர்ந்தவர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர். தாங்கள் நேர்மையாக நடந்தோம். இதில் எந்தவிதமான கையூட்டலும் நடக்கவில்லை என்றால் நேர்மையாக இதனை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களில் கடற்றொழில் அமைச்சினுடைய நேரடி கண்காணிப்பில் அமைச்சின் தவறான செயற்பாடுகள் ஊடாக சீன நாட்டவர்களுக்கு கடலட்டை பண்ணைகளை வழங்குகின்ற செயல்திட்டங்கள் முதன்மை பெற்ற விடயங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக கிளிநொச்சியின் எல்லையாக இருக்கின்ற கௌதாரிமுனை கல்முனை பகுதியிலே குய்லன் என்கிற தனியார் நிறுவனம் கடலட்டை பண்ணை அமைத்து இருக்கின்றது. இதற்கான அனுமதி பிரதேச செயலாளரிடமோ கடற்றொழில் திணைக்களத்திடமோ பெற்றுக்கொண்டதாக இல்லை.
மற்றொரு நாட்டைச் சேர்ந்த குடியுரிமை இல்லாதவர்கள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க எல்லை பரப்புக்குள் அந்த சங்கத்தினுடைய அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அந்த இடங்களில் பண்ணைகளை அமைத்து அந்த இடங்களை பிடித்தது என்பது காலங்காலமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற கடற்றொழிலாளர்களை இன்னமும் பாதிக்கும்.
எமது மக்களுக்கு இது தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் தேவை என்பது உண்மை. அதற்கு இன்னொரு நாட்டை கொண்டு அதனை வழங்க வேண்டுமே தவிர, இன்னொரு நாட்டை சேர்ந்தவர் வந்து இந்த வளங்கள் இருக்கின்ற பிரதேசங்களில் அந்த வளத்தை சூறையாடுகின்ற வகையில் அமையக்கூடாது. நேற்று கூட கடற்றொழில் அமைச்சர் கூறியிருக்கிறார் யாரும் வரலாம். பண்ணை அமைக்கலாம். யாரும் தடுக்க முடியாதென்று மமதையோடு பேசி இருக்கின்றார். அவருக்கு எந்தவிதமான கரிசனையும் அக்கறையும் மக்கள் மீது கிடையாது.
எமது பிரதேச மீனவர்களின் நலன் கருதி அந்த மக்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கான உபகரணங்களை வழங்கி அட்டை பண்ணைகளை அந்த மக்கள் செய்யக்கூடிய வகையில் அந்த வேலைத் திட்டத்தை செய்திருக்க முடியும். ஆனால் நேரடியாகச் சென்று கௌதாரிமுனையை நாம் பார்த்த பொழுது அரியாலையில் இருக்கின்ற அட்டை பண்ணை குஞ்சுகளை கௌதாரிமுனையில் வைத்து ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கான ஒப்பந்தமும் கூட எழுதப்பட்டிருக்கின்றது. இரு தரப்பும் கையொப்பமிடாமல் சட்டத்தரணியின் கீழ் ஒப்பந்தம் செய்து வெளியிட்டுக் கொண்டதே தவிர, இதுவரை இரு தரப்பும் ஒப்பந்தம் செய்யவில்லை.இது வெளிப்படையான பகல் கொள்ளை. அமைச்சரோடு சேர்ந்தவர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர். தாங்கள் நேர்மையாக நடந்தோம். இதில் எந்தவிதமான கையூட்டலும் நடக்கவில்லை என்றால் நேர்மையாக இதனை வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்க அதிபருக்கு இது தொடர்பில் தெரியாது,பிரதேச செயலருக்கு தெரியாது. இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். அனைத்து மக்களுக்கும் சார்பான நடவடிக்கையை நாங்கள் முன்னெடுப்போம்.
இது இந்த நாட்டினுடைய குறிப்பாக தமிழர் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்களுடைய இடங்களைப் பிடித்து இன்னொருவருக்கு கொடுப்பதும் மக்கள் கையேந்தி நிற்கின்ற நிலையில் அதனை தொடர்ந்து வைத்திருப்பதற்கு அரசாங்கம் முகவர்களாக இந்த அமைச்சர்களை பயன்படுத்துகின்றது என்பதுதான் உண்மை.
தொல்பொருள் அடையாளங்கள் என்ற வகையில் பல இடங்களில் காணிகளை அரசாங்கம் அபகரிக்க முயற்சித்தது. இப்பொழுது வடமராட்சி கிழக்கு மற்றும் தீவகப் பகுதிகளில் இருக்கின்ற காணிகளை இராணுவத்தினுடைய நில அளவைப் பிரிவை உருவாக்கி அதனூடாக அந்த காணிகளை அளவீடு செய்கின்றனர்.
மருதங்கேணி,பச்சிலைப்பள்ளி எல்லைப் பகுதியிலுள்ள மண்டலாய் பகுதியில் இராணுவ முகாமுக்கென இராணுவ நில அளவைப் பிரிவினரால் காணிகள் அளக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் இலங்கை நில அளவைத் திணைக்களத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இதனைவிட பல பகுதிகள் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.வடமராட்சியின் சாலை கடற்கரை வளங்களை கொள்ளையடிக்க ஒரு சில தரப்புக்கள் முனைகின்றன.
இங்கு வாழ்கின்ற மக்களை மதித்து அனைத்து இனங்களையும் மதித்து வட,கிழக்கு தமிழர்களின் அரசியல் உரிமைகளையும் மதித்து ஒரு தீர்வை முன்வைத்து இணைந்த இனங்களாக நாட்டை கட்டியெழுப்ப முனைந்தால் இந்த நாடு குறுகிய காலத்தில் முன்னேறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.