
இலங்கையில் கொவிட் 19 தொற்று நிலைமைக்கு இடையே வீடுகளுடன் தொடர்புடைய விபத்துகள் 50 முதல் 75 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் (சமூக மருத்துவம்) விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.
தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு விபத்துகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பல்வேறு விபத்துகளில் சிக்கி வருடாந்தம் 12 இலட்சம் பேர் வரை அரச மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக சுட்டிக் காட்டிய அவர், அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 15 இலட்சத்தினை எட்டும் என எதிர்வு கூரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு நாட்டில், வீதி விபத்துகள் உள்ளிட்ட பல விபத்துகள் காரணமாக வருடாந்தம் 12,000 பேர் வரை உயிரிழப்பதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டினார்.
வீதி விபத்துகள், விழுதல் மற்றும் சிராய்ப்பு, உடலில் விஷம் கலத்தல், விலங்குக் கடி, மின்சார தாக்குதல், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் போன்ற பல விபத்துகள் இதில் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே கொரோனா தொற்றுக்கு கட்டுப்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் 9 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க குறிப்பிட்டார்.
குழந்தைகள் தொடர்பான அதிகமான விபத்துகள் வீட்டிலேயே நிகழ்வதாகவும், அவர்களை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விசேட வைத்திய நிபுணர் (குழந்தை மருத்துவர்) ருவந்தி பெரேரா தெரிவித்தார்.
குழந்தை மற்றும் முன் கட்டிளமைப் பருவ பிள்ளைகளுக்கான பாதுகாப்பான சூழலை நிர்மாணிப்பதன் அவசியம் குறித்தும் அவர் இதன் போது தெளிவுபடுத்தினார்.
இலங்கை சனத் தொகையில் 12.4 வீதமான முதியோர்கள் (வயது 60 க்கு மேல்) விபத்துகளில் சிக்குவதாகவும் விபத்துகளினால் முதியோர்கள் நீண்ட கால உபாதைகளுக்கு உள்ளாகுவதாகவும் சுகாதார அமைச்சின் இளம், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரோமி மாதுவகே தெரிவித்தார்.
இதன் காரணமாக நீண்ட நாட்கள் வைத்தியசாலையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதாகவும் அரசாங்கம் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு சிகிச்சைக்காக பல ஆயிரம் ரூபாய்களை செலவிடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
.