இலங்கையின் வட மாகாணத்தில் சீனாவைப் போன்றே பாகிஸ்தானும் நுழைய முயற்சிக்கின்றதா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே, சிறீதரன் எம்.பி. இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் தூதுவர் வட மாகாணத்துக்கு சென்றதன் நோக்கத்தை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்கம் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு காணிகளை வழங்குமாக இருந்தால், தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் துன்பப்பட நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
வட மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் கடலட்டைகள் வளர்ப்பிற்காக சீனாவுக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்தும் சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கால கட்டடம் ஒன்றை ஹோட்டலாக மாற்றுவதற்கு அல்லது சீன நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும் சிறீதரன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
“அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, யாழ். கச்சேரிக்கு முன்னால் உள்ள காணி சீன நிறுவனத்திற்கு வழங்க முயற்சிகள் இடம்பெறுவதாக கேள்விப்பட்டோம்.
பாகிஸ்தான் தூதுவர் மண்டைதீவில் தங்கியிருந்து, அல்லைப்பிட்டி கரையொரப் பகுதியை பார்வையிட்டுள்ளார். அந்தப் பகுதியில் ஏற்கனவே பாகிஸ்தான் நிறுவனம் ஹோட்டல் கட்ட முயற்சித்த போது, நாம் தடுத்தோம்.
அதனை கட்டும் முயற்சி மீண்டும் எடுக்கப்படுகின்றதா? அதற்காகத்தான் தூதுவர் அங்கு வந்தாரா? இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்” என்றும் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.