உரம் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல விவசாயிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவர் அனுர குமார திசாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று ஜேவிபி தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உரம் வழங்குமாறு கோரி மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்குபவர்களைக் கைது செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாகவும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் விவசாயிகளும் பொதுமக்களும் உரம் வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அகில இலங்கை விவசாயிகள் சங்கம் இன்று அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு பயப்படாமல் பொதுமக்கள் போராட்டங்களுக்கு தாம் தொடர்ந்தும் தலைமைத்துவம் வழங்குவதாக ஜேவிபி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.