இந்த அரசின் பயணக் கட்டுப்பாடு என்று ஒரு நகைச்சுவையான நாடகமே மூன்றாவது அலையில் நாட்டின் நிலைமை மோசமடைவதற்கு காரணம். கொவிட் தொற்றினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை மீண்டும் மீண்டும் சுமைகளை கொடுத்து இந்த அரசு துன்பப்படுத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
கொவிட் தொற்றினால் இந்த நாட்டின் நிலைமை வரவர இன்னும் மோசமாகிக் கொண்டு செல்கின்றது கொவிட் தொற்று ஒழிப்புக்கான அமைச்சர் ஒரு கருத்தையும், கொவிட் ஒழிப்பு செயலணிக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி வேறொரு விதமான அறிக்கையும், சுகாதார அமைச்சர் இன்னுமொரு விதமான அறிக்கையையும் வெளியிடுகின்றனர்.நாட்டு மக்கள் தற்போது மிகவும் குழப்பமான நிலையில் இருக்கிறார்கள்.
கொவிட் முதலாவது, இரண்டாவது அலை இலங்கையிலே ஏற்பட்ட போது அரசாங்கம் கன்னியமாக நடந்து ஊரடங்குகளை அமுல்படுத்தி கொவிட் பரவலை ஓரளவிற்கு கட்டுப்படுத்தியது. ஆனால் இந்த மூன்றாவது அலையிலே பயணக் கட்டுப்பாடு என்று ஒரு நகைச்சுவையான நாடகமே இடம்பெற்றது. பயணக் கட்டுப்பாடு பெயரளவில் இருக்கின்றதே தவிர, மக்களது நடமாட்டம், வாகனப் போக்குவரத்து போன்றன சர்வசாதாரணமாகவே இருந்தது.
உண்மையிலேயே ஆடைத் தொழிற்சாலைகள் கிராமப்புற பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த மூன்றாவது அலையில் கொவிட் தொற்றினை கிராமப் புறங்களுக்கு கொண்டு சென்ற பெருமை இந்த ஆடைத் தொழிற்சாலைகளுக்கு தான் கிடைத்திருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசம் கொவிட் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகமான தொற்றாளர்கள் அங்கு இனங்காணப்பட்டார்கள்.அதற்கு காரணம்,அந்தப் பிரதேசத்தில் இருந்து தம்பலகாமம், கந்தளாய் போன்ற ஆடைத் தொழிற்சாலைக்கு சென்று வருவபவர்களினால் அங்கு தொற்று கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
இந்த அரசு கொவிட் தொற்றை ஒழிப்பதற்கான முக்கிய காரணியான தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை துரிதப்படுத்தி இதனை ஒழிக்க வேண்டும். தற்போது ஐரோப்பிய, அரேபிய நாடுகள் கூட இலங்கையை கொவிட் சிவப்பு வலயத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இதற்கும் மேலாக இந்தத் தொற்றில் அதிகம் பாதிப்புக்குள்ளான கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீன் பிடியாளர்கள், சிறு வியாபாரிகள் அரசின் எரிபொருள் விலையேற்றத்தினால் மேலும் அதிகமாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
பசில் ராஜபக்ஷ அவர்கள் அமெரிக்காவில் இருந்த நேரம் தான் இங்கு எரிபொருள் விலையேற்றப்பட்டதாகவும், அவர் நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலையேற்றம் நடைபெற்றிருக்காது என்றும் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களே கூறிக் கொள்வதை நாங்கள் அவதானிக்கின்றோம். அப்படியானால் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அப்பால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கிய பசில் ராஜபக்ஷ அவர்களா இப்படியான முடிவுகளை எடுப்பவர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வெகு விரைவில் வரவிருப்பதாகவும், அதன் பின் எரிபொருட்கள் விலை குறையும் எனவும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த வகையில் தற்போது நாட்டு மக்கள் கொவிட் தொற்றினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது மீண்டும் மீண்டும் இந்த அரசு மக்களை துன்பப்படுத்தக் கூடாது. எரிபொருள் விலை ஏற்றத்துக்கு மேலாக எரிவாயு விலையேற்றம் வரவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.எனவே இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்ள வேண்டும். மக்களை தற்போதைய நிலையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.