இலங்கையின் டொலர் கையிருப்பைப் பலப்படுத்துவதற்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஒத்துழைக்க முன்வந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் டபில்யு.டி. லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடன் தவணைகளைச் செலுத்துவதில் இலங்கை, டொலர் தட்டுப்பாடொன்றுக்கு முகங்கொடுத்துள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் பங்களாதேஷ் மத்திய வங்கியில் இருந்து நாணய பரிமாற்ற முறையில் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆகஸ்ட் மாதம் இந்தியாவிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மேலும் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாணய பரிமாற்றல் முறையில் இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உலக நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகஸ்ட் மாதமளவில் கிடைக்கும் என்றும் மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கையிருப்பில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணயங்களே இருப்பதாகவும் தெரியவருகிறது.