November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது; கெஹலிய தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு, நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறுவப்பட்ட அரசு.மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கின்ற அரசு. எனவே, எந்தவொரு சதித் திட்டத்தாலும் இந்த அரசை கவிழ்க்க முடியாது. இந்தத் தகவலை அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுவோருக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

‘அரசைக் கவிழ்க்க உள்ளேயும் வெளியேயும் சதி முயற்சிகள் நடக்கின்றன என்று ஊடகங்களில் செய்திகள் மூலம்தான் அறிந்து கொண்டேன்.இது உண்மையா,பொய்யா என்று சதித் திட்டங்களை தீட்டுவோருக்குத்தான் தெரியும்.

எனினும், ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சர்கள் – இராஜாங்க அமைச்சர்கள் – ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில்தான் செயற்படுகின்றார்கள். இதை மீறி கட்சிக்குள்ளே சதித்திட்டங்கள் நடக்கின்றன என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

அதேவேளை, அரசைக் கவிழ்க்க வெளியே நீண்ட நாட்களாக பல சதி முயற்சிகள் நடக்கின்றன. அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் தான் பிரதான வகிபாகம் வகிக்கின்றனர். அரசையும், மக்களையும், ஒட்டுமொத்த நாட்டையும் குழப்பும் வகையில் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பஸில் ராஜபக்ச,தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் என்ற தகவலைக்கூட எதிரணியினர்தான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். உண்மையில் இதுவரைக்கும் எம்.பி.யாகும் தீர்மானத்தை பஸில் ராஜபக்ச எடுக்கவில்லை. அவர் விரும்பினால் நாடாளுமன்றம் வர முடியும். அவருக்காக அரசில் பலர் எம்.பி. பதவியை இராஜிநாமா செய்யத் தயாராகவுள்ளனர்.பஸில் ராஜபக்ச,ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர்.எனவே, அரசில் அவரின் வகிபாகம் முக்கியம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.