July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் செப்டெம்பர் மாதத்துக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்’;ஜனாதிபதி

Vaccinating Common Image

இலங்கையில் செப்டெம்பர் மாதத்துக்குள் நாட்டில் 13 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டெம்பருக்குள் பெரும்பாலும் கொரோனா தடுப்பூசி வழங்க முடியும் எனவும்  ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இன்று (25) ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு இதுவரை மொத்தம் 4,494,000 தடுப்பூசி டோஸ்கள் கிடைத்துள்ளதாகவும், நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

இதேவேளை, சினோபார்ம், சினோவாக்ஸ் மற்றும் ஸ்பூட்னிக் வி உள்ளிட்ட 17 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் ஜூலை முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தெரிவு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் முன்னெடுக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் கட்டுப்பாடு குறித்த சிறப்புக் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொவிட் -19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் இலங்கையின் அணுகுமுறையை உலக வங்கி பாராட்டியுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை வாங்கும் போது வெளிப்படைத்தன்மை அடிப்படையில் தெற்காசிய நாடுகளில் உள்ள சக நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தை முன்னணி நிறுவனமாக உலக வங்கி அங்கீகரித்துள்ளது.

இதை அங்கீகரிக்கும் விதமாக, தடுப்பூசிகளை வாங்கும் போது இலங்கைக்கு உலக வங்கி வலைத்தளம் மூலம் பணம் செலுத்துவதற்கான அணுகல் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.