July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் வௌவால்களிடையே கொரோனா வைரஸ்: ஆய்வில் தகவல்

இலங்கையில் இரண்டு வௌவால்கள் இனங்களிடையே அல்பா மற்றும் பீட்டா-கொரோனா வைரஸ்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐந்து வெவ்வேறு வௌவால்கள் இனங்கள் வசிக்கும் இலங்கையின் மிகப்பெரிய இயற்கை குகைகளில் ஒன்றான ‘வவுல் கால்கே’ என்ற குகையில் ஆய்வாளர்கள் சமீபத்தில் வௌவால்களைப் பற்றிய ஆய்வுகளை செய்துள்ளனர்.

இந்த ஆய்வின் போது அல்பா மற்றும் பீட்டா-கொரோனா வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மன் ரொபட் கோன் ஆய்வு நிறுவனம்  ஆகியன இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின்  ஆய்வாளர் தேஜானி பெரேரா தெரிவித்துள்ளார்.

2018 முதல்  395 வௌவால்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 35 வௌவால்களிடம் அல்பா மற்றும் பீட்டா வைரஸ் உள்ளமை கணடறியப்பட்டதாக தேஜானி பெரேரா கூறியுள்ளார்.

எனினும் இலங்கையில் கொரோனா வைரஸ் வௌவால்களிடமிருந்த மனிதர்களுக்கு பரவல் அடைகின்றதா என்பதை உறுதிப்படுத்தும் எந்த ஒரு ஆய்வு முடிவுகளும் இல்லை என கூறியுள்ள அவர் அதற்கு மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு வௌவால்கள் சுற்று சூழலுக்கு தேவையான ஒரு விலங்கு, தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக்கொண்டு அதனை துன்புறுத்த வேண்டாம் எனவும் தேஜானி பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.

2019 இறுதியில் சீனாவின் வுஹானில் வௌவால்களிலிருந்து கொரோனா வைரஸ் மனிதனுக்கு பரவியதாக என்ற ஆராய்ச்சிகள் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டன.

வௌவால்கள் வைரஸ்களை காவும் இயல்புடையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட தூரம் பறக்கக்கூடிய வௌவால்கள் உண்ணும் பழங்கள் போன்றவற்றை ஏனைய உயிரினங்கள் உட்கொள்வதால் அவற்றுக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

வெளவால்களுக்கும் வைரஸ்களுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதன் மூலம் உலகில் கொரோனா, எபோலா, மார்பர்க், நிபா, போன்ற வைரஸ் பெரும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த அல்லது குறைப்பதற்கான உத்திகளை உருவாக்க உதவும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

கொரோனா வைரஸ், அல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா ஆகிய பிரிவுகளை உடையதாக சமீபத்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில், அல்பா மற்றும் பீட்டா கொரோனா வைரஸ்கள் இலங்கையில் உள்ள வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் கழுதைகள் மற்றும் பன்றிகள் போன்ற பிற விலங்குகளிலும் இந்த வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இலங்கையில் வெளவால்களில் அல்பா மற்றும் பீட்டா கொரோனா வைரஸ்கள் இருப்பதற்கான ஆதாரங்களையும் அவற்றின் முடிவுகளை ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட “journal vaccines” என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.