நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார பிரிவிற்கு அறிவிக்காமல் மறைத்து வைக்கப்படுவதாக தமக்கு தகவல்கள் கிடைப்பதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு தொற்றாளர்களை மறைத்து வைத்திருக்கும் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் அவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார பரிசோதகர்கள் இது தொடர்பில் அவதானமான இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இன்று பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட போதிலும் எழுந்தமானமாக மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் ஊடாக அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று அடையாளம் காணப்படாத தொற்றாளர்கள் பலர் வெளியில் இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.