இலங்கை முழுவதும் கடந்த 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று கொவிட் தடுப்புச் செயலணி தெரிவித்துள்ளது.
இதனிடையே கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரனவாய் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தலைமன்னார் பியர் மேற்கு, தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் பதுளை மாவட்டத்தில் வெலிமடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹூலங்கபொல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொத்தகந்த கிராம சேவகர் பிரிவின் நொரகல்லவத்த மேல் பிரிவு, பனாவென்ன கிராம சேவகர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டத்தின் முதலாம் பிரிவு, பனாவென்ன கிராம சேவகர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டத்தின் 5 ஆம் இலக்க பிரிவு, கபுஹென்தொட்ட கிராம சேவகர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டத்தின் 5 ஆம் இலக்க பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் மத்துகம பொலிஸ் பிரிவின் யட்டதொல கிராம சேவகர் பிரிவின் அம்பத்தென்னவத்த பிரதான பிரிவு மற்றும் க்ளே பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் 233 ஆம் இலக்க தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகியன இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.