
எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு தலா 500,000 ரூபா இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு இன்று (23) தாக்கல் செய்யப்பட்டது.
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கே இந்த இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆர்வலர் சரத் இத்தமல்கொட மற்றும் மூன்று மீனவர்கள் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் இன்று இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர, மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகம் மற்றும் கப்பல்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜயசிங்க, துறைமுக அதிகார சபையின் தலைவர், எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கை முகவர் உள்ளிட்ட 12 பேரை பிரதிவாதிகளாக பெயரிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.