இலங்கையின் கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளான எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் மூலம் சுற்றாடலுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஐநா அலுவலகம் தெரிவித்துள்ளது.
சேதத்தை மதிப்பாய்வு செய்வதிலும் மீட்பு நடவடிக்கைகளிலும் ஐநா இலங்கைக்கு உதவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தைப் போன்ற பேரழிவுகள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து உதவவுள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
கப்பலில் இருந்து வெளியேறும் ஆபத்தான, நச்சுப் பொருட்கள் சுற்றுச் சூழலுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் விபத்து கடலோர மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் மற்றும் இரசாயன கசிவுகள் தொடர்பான நிபுணர்கள் இலங்கையில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.
கப்பலின் முகவர்களும், இலங்கை அரசாங்கமும் இதுவரையில் கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.