July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போலி கடன் அட்டை மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜை உள்ளிட்ட நால்வர் கைது!

போலி கடன் அட்டையை பயன்படுத்தி பண மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக சீன பிரஜையுடன் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இணையவழியில் பொருட்கள் விநியோகம் செய்கின்ற நிறுவனம் அளித்த முறைப்பாட்டினை தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் இணையவழி ஊடாக கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை முன்பதிவு செய்ததாகவும், பின்னர் கட்டணம் வசூலிக்க சென்ற போது அந்த அட்டைகளில் பணம் இல்லை என தெரிய வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் போலி கடன் அட்டைகளை தயாரிப்பது தெரிய வந்துள்ள நிலையில், அவர்களிடம் இருந்து சுமார் 30 போலி கடன் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் இணைய வழி மூலம் பெறப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட நபர்களால் மறுவிற்பனை செய்யப்பட்டமையும் விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சந்தேக நபர்கள் இரண்டு நாட்களுக்குள் 787,000 ரூபாய் மோசடி செய்ததாகவும், சந்தேக நபர்கள் கண்டி, வரக்காபொல மற்றும் கல்கிஸையில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் சீன நாட்டு பிரஜையின் உதவியுடன் கடன் அட்டைகளை தயாரித்துள்ளனர் எனவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.