
File Photo
சீன அபிவிருத்தி வங்கியுடன் (சி.டி.பி. ) செய்து கொண்டுள்ள 700 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்திற்கு அமைய மீதமுள்ள 200 மில்லியன் டொலர்களை அடுத்த மாதம் அளவில் இலங்கை அரசு பெற்றுக் கொள்ள உள்ளது.
கொவிட் -19 தொற்று நோய் காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்யும் வகையில் இந்த கடன் உதவியை சீன அரசு இலங்கைக்கு வழங்கியது.
இதில் முதல் கட்டமாக 500 மில்லியன் டொலர்களை ஏப்ரல் மாதத்தில் இலங்கை பெற்றுக் கொண்டிருந்தது.
“மிகுதித் தொகையான 200 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கான ஆயத்தங்களை இலங்கைக்கான சீன தூதுவர் மேற்கொண்டு வரும் நிலையில், ஜூலை மாதத்திற்குள் இதனை சி.டி.பி. யிடமிருந்து இலங்கை பெறும் ” என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல்லே தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியுடனான 1.5 பில்லியன் டொலர் இடமாற்று வசதிக்கு சீனாவின் மத்திய வங்கி ஒப்புதல் அளித்த பின்னர் இந்த கடன்கள் கிடைக்கப் பெற்றன.
இரு நாடுகளினதும் மத்திய வங்கிகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
இதனிடையே, இலங்கை 2025 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 4.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இது தொடர்பாக, நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி வெளிநாட்டு வரவுகள் மூலம் நாட்டின் கடன்களை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.